Press "Enter" to skip to content

மாற்றுத்திறனாளி இளைஞர்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக கைகோர்க்கும் ChildFund Sri Lanka

இலங்கையில் சிறுவர்களும், இளைஞர்களும் ஆரோக்கியமானவர்களாகவும், கல்வி கற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும் மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்வதையும் உறுதி செய்வதற்காக ChildFund Sri Lanka நிறுவனமானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.

அரச நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூகங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், இந் நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள இலகுவில் பாதிப்பிற்கு உட்படும் தன்மை அதிகமாகக் காணப்படும் மக்களைச் சென்றடைகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் அன்றாடச் செயற்பாடுகள், வாய்ப்புகள் மற்றும் சூழல்களுக்குச் சமமான அணுகலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சமூகத்தை உருவாக்குவது ChildFund Sri Lanka நிறுவனத்தின் நான்கு முக்கிய மூலோபாய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இது கல்வி, வாழ்வாதாரம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சவால்களும் தசாப்த கால அர்ப்பணிப்பும்

மாற்றுத்திறனாளிகளில் ஏறத்தாழ 70 வீதமானவர்கள் (70%) தொழில் வாய்ப்பு அற்றவர்களாகக் காணப்படும் ஒரு முக்கியமான தேசிய சவாலை இலங்கை எதிர்கொள்கிறது. கல்வியைப் பெற்றுக்கொள்வதில் வரையறுக்கப்பட்ட அணுகல், போதுமான பயிற்சி வாய்ப்புகள் இல்லாமை மற்றும் சமூகம் காட்டும் எதிர்மறையான அணுகுமுறை ஆகியவையே இதற்கு முக்கிய தடைகளாகும்.

இதனை எதிர்கொள்ளும் வகையில், ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக 12,000-இற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு ஆதரவளித்து, இத்திட்டமானது உடல், புலன் மற்றும் நரம்பியல் வளர்சிக் குறைபாடுகள் கொண்ட 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு நிலையான தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் முயற்சிகளுக்கான பாதைகளை உருவாக்குகிறது. குறிப்பாக குறைந்த வருமானம் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சமூக சேவைகள் திணைக்களத்துடனான பலமான பங்காளித்துவம்

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக, சமூக சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து ChildFund Sri Lanka வலுவான கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து சந்தைக்கேற்ற பின்வரும் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்த ஆதரவளித்துள்ளது:

  • உபசரிப்பு (Hospitality) மற்றும் விற்பனை உதவியாளர்கள்

  • கைபேசி பழுதுபார்த்தல்

  • பேஸ்ட்ரி மற்றும் பேக்கர்ஸ் (Pastry & Bakery)

  • நகை தயாரித்தல் மற்றும் பத்திக் உடைகளைத் தயாரித்தல்

  • பாதணி தொழில்நுட்ப வல்லுநர்கள்

  • நாற்றுமேடை வடிவமைப்பாளர்கள் மற்றும் நீர் வழங்கல்/கழிப்பறை இணைப்பு திருத்துநர்கள்

தேசிய முன்னுரிமைப்படுத்தல்களுக்கு ஆதரவளித்தல்

பின்னணி, பால்நிலை, உடல் திறன் அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பணியாளரும் சமமாக மதிக்கப்படும் பணியிடங்களை ஆதரிப்பதன் மூலம், இலங்கையின் தேசிய முன்னுரிமைப்படுத்தல்களுக்கு இந்நிறுவனம் நேரடிப் பங்களிப்பை வழங்குகிறது.

இதன் ஒரு அங்கமாக, தொழில் இடங்களில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய வேலைவாய்ப்புக்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதில் தொழில் வழங்குநர்கள், அரச பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து, குறுகியகால நடைமுறைப் பயிற்சிகள், நியாயமான மாற்றங்கள் மற்றும் நிலையான தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

“அயாதி” மையம் மற்றும் “திரிய” திட்டத்துடனான இணைவு

இளைஞர்களும் மாற்றுத்திறனாளிகளும் நிலையான தொழில் வாய்ப்பைப் பெற உதவும் வகையில், இலங்கையில் உள்ள “அயாதி (Ayati)” மையத்துடன் இணைப்பதன் பெறுமதியினை ChildFund Sri Lanka இனங்கண்டுள்ளது. அயாதி மையத்தால் நடத்தப்படும் “திரிய (Diriya)” தொழில் வாய்ப்புத் திட்டத்துடன் திறன் மேம்பாடு, மறுவாழ்வு சேவைகள் மற்றும் தனியார் துறையை இணைப்பதன் மூலம், மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தடையின்றி வேலைவாய்ப்புகளைப் பெறுவதோடு நீண்டகால சமூக உள்ளடக்கமும் உறுதி செய்யப்படுகிறது.

எதிர்கால இலக்கு

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற ChildFund Sri Lanka உறுதியாக உள்ளது. எதிர்காலத்தில்:

  • ஆதரவான வேலைவாய்ப்பு மாதிரிகளை (Supportive employment models) உருவாக்குதல்.

  • மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி தொழில் செய்வதற்கான அணுகல் வசதி கொண்ட சூழலை ஏற்படுத்துதல்.

  • இலங்கையின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் அவர்கள் முழுமையாகப் பங்கேற்க வழிவகுக்கும் அமைப்பு ரீதியான மாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு செயல்படவுள்ளது.

முக்கிய செய்தி: மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதாக வேலைவாய்ப்புகளை வழங்குவது என்பது தருமத்திற்காகச் செய்யும் செயல் அல்ல. சரியான பங்காளித்துவம், நடைமுறை உதவி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், மாற்றுத் திறனாளிகள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து, சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி, சிறந்து விளங்கவும் வழிநடத்தவும் தேவையான வலிமையைப் பெற்றுக்கொள்ள முடியும்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *